“நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் 85% திமுக வென்றிருக்கும்” - ஸ்டாலின்
ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக 85 சதவிகித இடங்களை பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று திமுக 80 சதவிகித இடங்களில் முன்னிலை என தெரிந்ததும், ஆளும் கட்சியினர் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவிடாமல் செய்தனர் என குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை, உள்ளாட்சியிலும் பெற்று இருப்பதாக கூறிய ஸ்டாலின், இதேபோல், 2020 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமரும் என நம்பிக்கை தெரிவித்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக 85 சதவிகித இடங்களை பெற்றிருக்கும் எனவும் கூறினார்.

