இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது ? - ஸ்டாலின் கேள்வி
பேனர் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது ?” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் தவறி விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக நிர்வாகி ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனரால்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்தது.