“வேண்டும்..வேண்டும்.. மெரினா வேண்டும்” - முதல்வர் இல்லம் முன்பு திமுகவினர் போராட்டம்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவை அடுத்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புக்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துளார்.
இதனையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிட வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், “ அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் வேண்டுகோள் மனுவை முதலமைச்சரிடம் கொடுத்தோம். அவர் பார்ப்போம்” என்று கூறினார். மேலும் “இன்னும் எங்களுக்கு முழுமையான பதில் சொல்லவில்லை. பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.
இதனையடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவைத் தவிர வேறு இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக் கழகம் எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தயார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இடம் அளிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் அளிக்க வலியுறுத்தி கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வேண்டும், வேண்டும் மெரினா வேண்டும்” என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.