மெரினாவில் இடம்கோரிய திமுக மனு : அனல்பறந்த வாதம் !
அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு நடந்த வழக்கு விசாரணை வாதத்தில் அனல் பறந்தது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக இரவே உயர்நீதிமன்ற விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கின் தீர்ப்பு காலை 8:30 மணிக்கு வெளியாகவுள்ளது. கருணாநிதியின் மறைவால் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்திற்கும் நாளை விடுமுறையாகும். இருப்பினும் சிறப்பு வழக்காக நாளை காலை நீதிமன்ற அறை எண் 1ல் நாளை விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் விசாரணையின் போது ஆஜரான ட்ராபிக் ராமசாமி தரப்பு, கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன், திமுக இரவு நேரத்தில் வழக்கு தாக்கல் செய்தது நியாயமற்றது என்றார். அத்துடன் அதற்கு அரசு உடனே விளக்கமளிக்க வேண்டும் என்பது நியாயமற்றது என வாதிட்டார். இதையடுத்து பேசிய நீதிபதி குலுவாடி ரமேஷ், திமுகவின் மனுகுறித்து முடிவு செய்ய நீங்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்னையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்றார். அவ்வாறு திடீரென பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வைத்தியநாதன், “நாங்கள் அதற்காக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ஜெயலலிதா மறைவின் போதும் சட்டம் மாற்றப்படவில்லை. தற்போது கருணாநிதி மறைவின் போதிலும் சட்டம் மாற்றப்படவில்லை. எனவே கருணாநிதியின் உடலையும் மெரினாவில் அடக்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர், வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் தீர்ப்பு 8.30 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.