”மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டது திமுக அரசு; இது அராஜக..” - பத்திரிகையாளர் ஆர்.மணி காட்டம்!
- சீ. பிரேம்
சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு பணிநிரந்தரம் கோரியும், தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்தும் ஆகஸ்ட்-1 ஆம் தேதி முதல் தூய்மைபணியாளர்கள் போராடி வந்தனர். இதற்கிடையில் அரசுக்கும் தூய்மை பணியாளர் தரப்புக்கும் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனாலும், சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில், தூய்மைப் பணியாளார்களின் 13-வது நாள் தொடர் போராட்டமானது அகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் நடந்த கைது நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தாக்கியது போன்ற காணொளிகள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் “புதிய தலைமுறையில் கொந்தளிக்கும் தூய்மை பணியாளர்கள்.. அதன் பிண்ணனி என்ன ? ”என்ற தலைப்பில் நேர்பட பேசு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பத்திரிக்கையாளர் ஆர். மணி கலந்துகொண்டு தமிழக அரசை விமர்சித்துப் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது;
தூய்மைபணியாளர்களின் போராட்டத்தில் மனிதநேயமற்ற தன்மையின் உச்சமாக நடந்து கொண்டிருக்கிறது மாநில அரசு. தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் தனியார்மயப் படுத்துதலாக இருந்தாலும் இதை வெறும் தனியார்மயப் படுத்துதலுகான பிரச்னையாக மட்டுமே பார்க்க முடியாது. இதுவரை 23,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளார்கள், தனியார்மயப் படுத்துவதின் மூலம் 15,000 சம்பளம் மட்டுமே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
தூய்மைப்பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். அதிலும் கணவனை இழந்து குழந்தகளுடன் வாழும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் வரும் சம்பளத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சம்பளம் குறைவது எப்படி ஏற்றுக்கொள்வதாக இருக்கமுடியும். தனியார்மயப் படுத்தலின் தொடர்ச்சி தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றாலும், வாங்கக்கூடிய சம்பளத்தைக் கூட பாதுக்காக்க தவறி மனிதத் தன்மை இல்லாமல் தான் இந்த மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தப் போராட்டமானது சம்பள உயர்வுக்கான போராட்டம் கிடையாது. வாங்கும் சம்பளத்தை அப்படியே கொடுக்க வேணடும் என்று தான் போராடி இருக்கிறார்கள்.
மேலும், இந்த போராட்டம் சமூகநீதி கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது. தூய்மைப்பணிகளை செய்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வருவபர்களாகவே இருக்கிறார்கள். அதனால் அரசானது தனியார்மய படுத்துதலுக்கான பிரச்னை என்னும் போர்வையில் ஒளிந்து கொள்ளாமல் சமூக நீதி அடிப்படையில் செயல்படுவதும் அவசியம். இது போல அரசு மனிதாநேயமற்ற முறையில் செயல்பட்டிருகின்றன என்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.
மேலும், எதிர்கட்சியாக இருக்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருந்தால் இந்தளவிற்கான போரட்டம் நடைப்பெற்றிருக்காது. 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டபோது கலைஞர் முரசொலியில் எழுதியது ”நள்ளிரவு கைதுகள் ஒரு அராஜக ஆட்சியின் அடையாளங்கள்”. ஆனால் இன்று திமுக சாம்சங் தொழிலாளர் போராட்டம், தூய்மைப்பணியாளர் போராட்டம் என அனைத்திலும் திமுக அராஜகப் போக்கையே கடைபிடித்து வருகிறது” என்று பேசினார்.