“நடிகர் சங்கத் தேர்தலில் திமுக தலையீடு” - ராதாரவி பேட்டி
நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது என நடிகர் ராதாரவி பகிரங்க பேட்டியளித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பின்னர் வெளியே வந்து பேட்டியளித்த அவர், “நான் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நயன்தாரா குறித்து பேசினேன். அதற்கு மன்னிப்பும் கேட்டேன். ஆனாலும் என்மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் நானே விலகவிட்டேன். யார் யாருக்கு என்ன உறவு என்பதை தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவில் இருந்து விலகி இருந்தாலும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற முடிவை 2 நாட்களுக்கு முன்னர்தான் எடுத்தேன். ஏனென்றால் செய்யாறில் இருந்து 2 நாட்களுக்கு முன்னர் திமுக நிர்வாகி ஒருவர் பேசினார். நான் பாக்யராஜ் அணியின் பக்கம் நடிகர் சங்க தேர்தலில் இருப்பதால் அந்த அணிக்கு யாரும் உதவக் கூடாது என திமுக தலைமை கூறியதாக அவர் தெரிவித்தார்.
என்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று புரிந்துகொண்டேன். எனவே தான் அதிமுகவில் வந்து சேர்ந்தேன். நடிகர் சங்க தேர்தலில் திமுகவின் தலையீடு இருக்கிறது. இது தலைமைக்கு தெரியுமா என்று தெரியாது. நான் திமுகவின் தலைமையை தான் நம்பி சென்றேன். ஆனால் அங்கு கைவிட்டுவிட்டார். நீங்கள் கூறிய இரட்டைத் தலைமை தற்போது திமுகவில்தான் உள்ளது” என்றார்.