திமுக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது: திருச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து திமுகவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். அவருடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு, திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.