மினி பட்ஜெட்டை செலவு செய்து இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது - செல்லூர் ராஜூ

மினி பட்ஜெட்டை செலவு செய்து இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது - செல்லூர் ராஜூ
மினி பட்ஜெட்டை செலவு செய்து இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது - செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

மதுரை மாநகர் அதிமுக வளர்ச்சி பணி குறித்து அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அ;மைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனைகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டுமென இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி மதுரை மாவட்ட அளவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பயந்து திமுகவின் 30 அமைச்சர்களையும் முழு நேரமும் பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், 1000, 500 பணம், இறைச்சி என அனைத்தையும் வாரிஇறைத்து திமுக இந்த வெற்றியை பெற்று இருக்கிறது. இதனை சாதாரணமாக கிடைத்த வெற்றி என்று கருத முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதிமுகவை பார்த்து முதல்வர் பயந்துள்ளார். கடந்த 28 நாட்களாக முப்பது அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். ஈரோடு பொது மக்களை கூடாரங்கள் அமைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளும் ரூபாய் ஆயிரம் மாலை ரூபாய் ஆயிரம் என வழங்கினர். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன், கோழிக்கறி வாங்கிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டது. தேர்தல் ஆணையம் இருக்கிறதா? அதிகாரிகள் இருக்கிறார்களா? என தெரியவில்லை மோசடியாக தேர்தல் நடைபெற்றுள்ளது. திமுக திருமங்கலம் ஃபார்முலாவை தாண்டி ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என மாறும் அளவிற்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கொண்டாடும் அளவுக்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையம் திமுகவிற்காகவும், ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கும் துணை நின்றது. இது என்னுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இது தோல்வி அல்ல வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம். விசுவாசம், நம்பிக்கை இதெல்லாம் திமுகவிற்கு கிடையாது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோரிக்கைகளை முதல்வர் கேட்டு பெற்றுள்ளார். அதன் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரையில் 24மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பாலம் வேலைகள் விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்துள்ளது. ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விசுவாசத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்கை செலுத்தி உள்ளனர். இதனை திமுகவினர் ஆகா ஓகோ என்று கொண்டாடக் கூடாது.

அதிமுக பெரிய வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியடைந்தால் கொண்டாடவும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம், பேசி இருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்றவரிடம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் நீடித்தால் அதிமுக மேலும் பலவீனமடையும் என்று தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com