இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு – 2வது முறையாக திமுக தலைவராகிறார் ஸ்டாலின்
திமுகவின் பொதுக்குழு இன்று கூடுகிறது. 2-வது முறையாக திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வாகிறார்.
திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும்பாலும் அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற இருக்கிறது.
இதில், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அனைவருக்கும் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக திமுக தலைவராக இன்று நடக்கும் பொதுக்குழுவில் தேர்வாக உள்ளார். இதே போல் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், 4 தணிக்கைக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும். இதே போல் இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக துணை பொதுச ;செயலாளர் சட்ட விதியில் மாற்றம் கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. திமுகவில் 5 துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியை 7 ஆக உயர்ந்த தலைமை திட்டமிட்டுள்ளது. திமுகவின் புதிய துணை பொதுச் செயலாளராக கனிமொழி, அமைச்சர்கள் சாமிநாதன் எ.வ.வேலு தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் சார்ந்த 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. திமுக தலைவராக மு.க ஸ்டாலின்இரண்டாவது முறையாக தேர்வாக இருப்பதால் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது இல்லம் முதல் பொதுக்குழு நடைபெறும் இடம் வரை வழி நெடுகிலும் மாவட்டச் செயலாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தி.மு.க பொதுக்குழுவை முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆரம்பித்து வைப்பார். காலை 10.00 மணிக்கு துவங்கும் பொதுக்குழு மதியம் 12 மணி வரை நடைபெறும். பொதுக்குழுவை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.