நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைது?
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக கடந்த 1996-ஆம் ஆண்டு, திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மூவர் கொலை தொடர்பாக, திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தியதாக கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனியம்மாள் மற்றும் உமா மகேஸ்வரி இடையே ஏற்கெனவே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசியல் ரீதியான பிரச்னையில் இந்தக் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக சீனியம்மாளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பேசியிருந்த அவர், திமுகவின் நற்பெயரை கெடுக்கும் விதமாக தன்னை இக்கொலையுடன் தொடர்பு படுத்தி போலீசார் விசாரணை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.