உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான் - பொன்முடி
‘கட்சி தொடங்கப்போவதில்லை‘ என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து திமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினிகாந்த் தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பேசியபோது, ‘’முதலில் அவர் உடல்நலம் தேறி நீண்டகாலம் வாழவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அவர் கட்சி ஆரம்பிப்பதாக கூறியபோதிலிருந்தே அவருடைய உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. சிலரின் தூண்டுதலின்பேரில் அவர் கட்சி ஆரம்பித்திருந்தாலும், எங்களுடைய தளபதி மிகவும் தெளிவாக இருந்தார். ரஜினி ஹைதராபாத்தில் இருந்தபோதுகூட ஸ்டாலின் அவரைத் தொடர்புகொண்டு உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் முக்கியம்.
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலில் அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை ஊடகங்கள்தான் அவரைத் தூண்டிவிட்டு அரசியலில் ஈடுபட வைத்தார்கள். அவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அரசியலை விட்டு அவர் விலகியிருப்பது நல்லதுதான். அதில் எந்த தவறுமில்லை’’ என்று கூறினார்.