“திமுகவினரின் செயல் அல்ல”- மூப்பனார் பெயர் அழிப்பு விவகாரத்தில் திமுக விளக்கம்
திருமானூர் அரங்கத்தில் மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டிருந்தது திட்டமிட்ட செயல் அல்ல என அம்மாவட்ட செயலாளர் சிவசங்கர் தெரிவித்தார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக பரப்புரை செய்து வருகிறார்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே. மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுக பரப்புரை செய்ததாக புகார் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள், அக்கட்சி கொடியுடன் உதயநிதியின் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காடரதித்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருமானூர் சென்றபோது உதயநிதியின் காரை த.மா.கவினர் மறித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட செயலாளர் சிவசங்கர் கூறுகையில், “திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதற்கு காரணம் திமுகவினரின் செயல் அல்ல. அரங்கத்தை சீரமைக்கும் போதோ அல்லது வர்ணம் பூசும்போதோ பெயர் அழிக்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.