சேலம்| நிலத்தகராறில் திமுக நிர்வாகி கொலை.. 5000 ரூபாய்க்கு கள்ளத் துப்பாக்கிகள்., அண்புமனி கண்டனம்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன்மலை கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (45). இவர் திமுகவில் கிளை கழகச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது மனைவி சரிதா உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ராஜமாணிக்கம் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து மனைவி சரிதா அளித்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரியக்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரது உறவினரான ராஜமாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கருமந்துறை காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இந்நிலையில், இந்த கொலை சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் ”தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும்” குற்றாஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிலத்தகராறுக்கு கூட ஆளுங்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது. தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

