
திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கில் திமுக-வின் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி என்றும், கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் போன்ற கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் என்றும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்;பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர் போன்றவை இரங்கல் தீர்மானத்தில் வாசிக்கப்பட்டன. முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செயற்குழு கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.