விருப்பப் பட்டியலில் விருத்தாசலம், விருதுநகர்.. தேமுதிகவுக்கு 10 இடங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!
தேமுதிக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் விஜயகாந்த் முதல்முறை வென்ற விருத்தாசலம், அவரது மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை திமுகவிடம் தேமுதிக கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அது தமிழ்நாட்டையும் பரபரப்பாக்கி உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. தவெகவுக்குள் எந்தக் கட்சிகளும் செல்லாத நிலையில் அது தனித்து விடப்பட்டுள்ளது. சீமான் கட்சியோ தனித்தே தேர்தலைச் சந்தித்துவருகிறாது. இந்த நிலையில், பிற கட்சிகள் அனைத்தும் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அதிமுக, திமுக ஆகிய பெரிய கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. அந்த வகையில், திமுக கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள விஜயகாந்தின் தேமுதிகவுக்கும் இன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் விஜயகாந்த் முதல்முறை வென்ற விருத்தாசலம், அவரது மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை திமுகவிடம் தேமுதிக கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 இடங்களும், விசிகவுக்கு 8 இடங்களும், சிபிஎம்முக்கு 5 இடங்களும், சிபிஐக்கு 5 இடங்களும் மதிமுகவுக்கு 4 இடங்களும், கொ.ம.தே.கவுக்கு 2 இடங்களும், இ.யூ.மு.லீக்கிற்கு 2 இடங்களும், ம.ம.கவுக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதேபோல், அதிமுகவும் கிட்டத்தட்ட தனது கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

