‘பேரவையில் வாக்குறுதி; ஆனால், மத்திய அரசுக்கு கடிதம்’: என்.பி.ஆர் குறித்து ஸ்டாலின் கேள்வி

‘பேரவையில் வாக்குறுதி; ஆனால், மத்திய அரசுக்கு கடிதம்’: என்.பி.ஆர் குறித்து ஸ்டாலின் கேள்வி
‘பேரவையில் வாக்குறுதி; ஆனால், மத்திய அரசுக்கு கடிதம்’: என்.பி.ஆர் குறித்து ஸ்டாலின் கேள்வி

“‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் யாருக்கு பாதிப்பு சொல்லுங்கள்’ என்று சட்டப்பேரவையில் கூறிவிட்டு, இப்போது, என்பிஆர் கணக்கெடுப்பில் ‘தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி’ ஆகியவற்றை தவிர்க்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் கூட்டறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் என்ன பாதிப்பு சொல்லுங்க என்று சட்டமன்றத்தில் வெற்று ஆவேச முழக்கமிட்டார் முதலமைச்சர். என்.பி.ஆர் விவரங்கள் “ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகின்றன”என்று சட்டமன்றத்தில் பச்சைப் பொய் சொன்னார் அமைச்சர் உதயகுமார். ஆனால் இப்போது , “தாய்மொழி, தந்தை, தாயார் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றை தவிர்க்கலாம்”என்பதோடு மட்டுமின்றி, “ஆதார், கைபேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம்”ஆகிய ஆவணங்களைக் கேட்க வேண்டாம் என்று கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

என்.பி.ஆர் விவகாரத்தில் முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயகுமாருக்குமே கருத்தொற்றுமை இல்லை, புரிதலும் இல்லை. மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருப்பது உண்மை என்றால், அந்தக் கடிதத்தை வெளியிட வேண்டியதுதானே?. ஏன் ரகசியமாக வைத்துக் கொள்கிறார்? குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு என்ற தி.மு.க.வின் வாதத்தை, சட்டமன்றத்தில் நான் பட்டியலிட்ட பாதகங்களை, இப்போது முதலமைச்சர் பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது உண்மை என்றால் “தமிழ்நாட்டில் என்.பி.ஆரை அனுமதிக்க மாட்டேன்” என்று அறிவித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டியதுதானே!

 இப்போதாவது “என்.பி.ஆரை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று உடனடியாக அறிவித்து, இன்றே அமைச்சரவையைக் கூட்டி “குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து மாபெரும் தவறு செய்து விட்டோம்”என்பதை உணர்ந்து, நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டு, ஒரு கூட்டறிக்கையை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com