ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது யார் ஆட்சியில்? எதற்கு பொய்? : முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது யார் ஆட்சியில்? எதற்கு பொய்? : முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி
ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது யார் ஆட்சியில்? எதற்கு பொய்? : முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் என்றும் அப்பாவி மக்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்க, ஸ்டெர்லைட் ஆலை தொடங்க நான்தான் காரணம் என்ற பழனிசாமியின் பச்சைப் பொய் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்குகின்றது என்றதும், “இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம்” என்று என் மீது “பச்சைப் பொய்” கூறி, குற்றம் சாட்டி, நீலிக் கண்ணீர் வடித்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீஸ் வேன்களில் நின்றெல்லாம் பொதுமக்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்த அராஜகக் காட்சியை நாடே தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைத்து, எங்கே உண்மைகள் வெளிவந்து தனது முகமூடி கிழிந்து தொங்குமோ எனப் பயந்து, அதையும் முடக்கி வைத்துள்ள முதலமைச்சர் இப்படி ‘உலக மகா’ பொய் சொல்வதைக் கேட்டு அப்பகுதி மக்கள் வெட்கி முகம் சுழிக்கிறார்கள்.

 ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அ.தி.மு.க. ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலை அமைக்கத் தடையின்மை சான்றிதழை 1.8.1994 அன்று கொடுத்தது அ.தி.மு.க. அரசு. ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்குச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு 17.5.1995 அன்று உத்தரவு பிறப்பித்தது அ.தி.மு.க. அரசு. இதனடிப்படையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆலை அமைப்பதற்கு 22.5.1995 அன்று “ஒப்புதல் ஆணை” (Consent Order) வழங்கியது.

முத்தாய்ப்பு வைத்தாற் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான். அப்படித் திறந்து வைத்த போது, “தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் மேலும் ஒரு புதிய மைல்கல்” என்று பேசியதும் ஜெயலலிதாதான்!


2013-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கமிட்டியில் இருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், “ஆலை பாதுகாப்பாக இருக்கிறது. விதிமுறை மீறல் இல்லை” என்று அறிக்கை தாக்கல் செய்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்!
அதனடிப்படையில்தான் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆகவே ஸ்டெர்லைட் பற்றிய அடிப்படை உண்மைகூடத் தெரியாமல்- திரித்துப் பேசலாம்; பொய் புரட்டுக்களைப் பொது மேடையில் நின்று கொண்டு “உண்மை போல்” ஆவேசமாக சப்தம் போட்டுப் பேசலாம்; மக்களைத் திசைதிருப்பலாம்; என்றெல்லாம் பழனிசாமி பகல் பொழுதிலேயே கனவு கண்டால், அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. முதலமைச்சரின் உளறலை, நெஞ்சறிந்தே சொல்லும் நீளமான பொய்யை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com