ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
ராணுவ வாகனத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் லட்சக்கணக்கன தொண்டர்கள் படைசூழ தொடங்கியது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.
காலையிலேயே டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயக்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல்ஹாசன், அஜித்குமார், நாசர், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
நாராயணசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர் ராவ், பினராய் விஜயன், குமாரசாமி உள்ளிட்ட முதலமைச்சர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ராகுல் காந்தி, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ தொடங்கியது. வழியெங்கிலும் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை முழக்கமிட்டார்கள்.
இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண்டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.