”என்னுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருப்பது நீங்களே” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு!

”என்னுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருப்பது நீங்களே” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு!
”என்னுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருப்பது நீங்களே” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரிப்பு!

தி.மு.கவின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (டிச.,28) காலை தி.மு.கவின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்றது.

இதில், தி.மு.கவின் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் என முக்கிய மூத்த நிர்வாகிகளின் முன்னிலையில் அனைத்து 23 அணிகள் மற்றும் குழுக்களை சேர்ந்த நிர்வாகிகளும், முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

அப்போது நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “கட்சியின் இரண்டு அணிகளுக்கு மட்டும் தலைவர்கள் இல்லை. ஒன்று இளைஞரணி, மற்றொன்று தகவல் தொழில்நுட்ப அணி. இவ்விரு அணிகளும் என்னுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருந்து பணியாற்றக் கூடியவை.

கட்சிக்கு பங்காற்றும் அணிகளில் மிக முக்கியமானவை இந்த அணிகள். தி.மு.கவின் தூண்களாக இருந்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு அனைத்து அணிகளுக்கும் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை அடுத்து பேசிய பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.கவின் மாணவர் அணியை பலப்படுத்த சில முக்கியமான அறிவுரைகளையும் வழங்கினார்.

அடுத்தாக, இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, “திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தில் தி.மு.கவின் இளைஞரணி மாநில மாநாடு நடத்த வேண்டும்.” என தனது கோரிக்கையை முன்வைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “IT Wing தரப்பில் திராவிட தடம் மற்றும் திராவிட மாதம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் தகவல் தொழில்நுட்ப அணி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. அனைத்து அணிகளையும் சமூக வலைதளத்தில் ஒன்றிணைத்து, கட்சியின் செயல்பாடுகளை பன்மடங்காக அதிகரிப்போம்.” என உறுதியளித்திருக்கிறார்.

டி.ஆர்.பி.ராஜா முன்மொழிந்ததை வழிமொழியும் விதமாக கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து “சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட, சாதி - மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்” என ட்விட்டர் பக்கத்திலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com