நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

நக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அ.தி.மு.க அரசுக்குக் கடும் கண்டனம். பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான தொடர் ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார - பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது. 

பேராசிரியை நிர்மலா தேவி விஷயத்தில் நடப்பது எல்லாமே மர்மமாக இருக்கிறது என்று நாட்டு மக்கள் உணர்கிறார்கள். அவர் புகார் தெரிவித்தவுடன் ஆளுநரே தன்னிச்சையாக ஒரு கமிட்டியை நியமித்தார். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், ஆளுநர் நியமித்த ஒருநபர் கமிட்டியும் விசாரித்தது. வழக்கத்திற்கு மாறாக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஜாமின் கொடுக்கக்கூடாது என்று அ.தி.மு.க அரசு தரப்பே தொடர்ந்து வாதாடி வருகிறது. 

இப்போது அந்த பேராசிரியை பற்றி எழுதிய நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியை விவகாரத்தில் எதை மறைக்க இப்படி சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அ.தி.மு.க அரசும், ஆளுநர் மாளிகையும் நடந்து கொள்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. 

சென்னை உயர்நீதிமன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய எச். ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஆளுநரே அவரை சந்தித்துப் பேசுகிறார். இன்னொரு பக்கம் ’பாசிச பா.ஜ.க’ என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். 

என்னதான் நடக்கிறது தமிழகத்தில்? தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத் தோன்றுகிறது. ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். 

பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதலமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு - அதுவும் அரசியல் சட்டப் பதவி யை வகிப்பவருக்கு அழகா? ஆகவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com