கருணாநிதியின் முகம் காண கோபாலபுரத்தில் காத்திருக்கும் தொண்டர்கள்..!
சமத்துவம், சமதர்மத்தை முன்வைத்து பல சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட தங்கள் தலைவர் கருணாநிதி, இந்த உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று கோபாலபுரம் வீட்டின் முன் ஏராளமான தொண்டர்கள் கூடியுள்ளனர்.
கருணாநிதியின் கரகர குரல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை நெடுங்காலமாகவே கட்டிப்போட்டிருக்கிறது. அவரின் அந்தக் குரலைக் கேட்கத்தான் இப்போதும் ஏராளமான திமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அவர் உடல் நலிவுற்றுள்ளதாக நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை அடுத்து பல்வேறு தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரம் வீட்டுக்கு சென்று வருகின்றனர். அவரை பார்த்து திரும்பியவர்கள் சொல்லும் நல்வார்த்தைக்காக தற்போது ஏராளமான தொண்டர்கள் கோபாலபுரம் வீட்டின் முன் கூடியுள்ளனர்.
வயதில் முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி, சாதி, மதங்களை விலக்கி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கோபாலபுரம் இல்லம் முன்பாக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கே கூடியிருந்த பெண் ஒருவர் எழுந்துவா தலைவா என்று அழுதபடி கூறியது கருணாநிதி மீது தொண்டர்களுக்கு இருக்கும் அதிகப்பட்ச அன்பை வெளிப்படுத்தியுள்ளது.
நேற்றைவிட திமுக தலைவர் கருணாநிதிக்கு நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் கோபாலபுரம் வாசலில் தோன்றி கையசைப்பார், சிரிப்பார் என்று திமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.