MK Stalin
MK Stalin web

திமுக கூட்டணியில் தொடர் குழப்பம்.. தொகுதிப் பங்கீடு முழுமையடையாத நிலை.. பின்னணி காரணம் என்ன?

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம், குறையாமல் நீடித்து வருவது அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசுபொருளாகியிருக்கிறது.
Published on
Summary

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சிக்கலாக உள்ளது. காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு குறைவாக வழங்கப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

உரிமைக் குரல், எதிர்ப்பு குரல் என திமுக கூட்டணியில் முதலில் காங்கிரஸ் மூலம் சலசலப்பு ஏற்பட்டது. ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு என்று வலியுறுத்திய காங்கிரஸ், தவெக-வை மாற்று வழியாக சிந்தித்து கூட்டணியை விட்டு பிரிந்து செல்லும் நிலைக்கு சென்றது. இறுதியில் கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டதை விட கூடுதலாக 3 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டு காங்கிரஸை சரி கட்டியது திமுக. இருந்தாலும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் இருதரப்பினருக்கும் இடையே சிக்கல் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

MK stalin with Congress leaders
MK stalin with Congress leaders web

அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் 5 தொகுதிகளுக்கு உடன்பட வைத்தது திமுக. காங்கிரஸ், தேமுதிகவிற்கு தொகுதிகளை கூடுதலாக ஒதுக்க மனம் இருக்கும் போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் குறைப்பது ஏன் என அதன் மாநில செயலாளர் சண்முகம் பொதுவெளியிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அங்கீகரிக்கப்பட்ட விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கும் திமுக, அங்கீகாரம் இல்லாத தேமுதிகவிற்கு 10 தொகுதிகளை ஒதுக்குவது ஏன் என எதிர்க்கட்சியினர் உட்பட ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போராடித்தான் தொகுதிகளை பெற வேண்டியிருப்பதாக விசிக தலைவர் தொல்திருமாவளவனும் வேதனை தெரிவித்திருக்கிறார். கேட்டதைவிட குறைவான தொகுதிகள் அளிக்கப்படுவது மன வலியை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.

MkStalin with VCK leaders
MkStalin with VCK leaders web

அதேபோல், தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் மக்கள் நீதிமய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் உயர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திமுக எங்களுக்கு கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக வருத்தம் இருப்பதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதெற்கெல்லாம் ஒருபடி மேலாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டணியில் இருந்தே வெளியேறிவிட்டார்.

Mk Stalin with DMDK leaders
Mk Stalin with DMDK leaders web

கூட்டணியில் எதிர்க் கருத்துக்கள், அதிருப்திகள் எழுவது ஜனநாயகம் தான். ஆனால், தேர்தல் நேரத்தில் அந்த அதிருப்தி தொடர்ந்து கொண்டே இருப்பது தான் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. அதிலும், தொகுதிப் பங்கீடு முழுமையாக முடிவடையாத நிலையில் கூட்டணிக் கட்சியினர் வெளிப்படுத்தும் இந்த அருப்தி, அதில் இன்னும் சிக்கல்கள் இருப்பதையே உணர்த்துகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com