கோவை: “வண்ணங்கள் இல்லை, எண்ணங்கள் தான் முக்கியம்” ஒன்றுகூடிய திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பல்வேற அரசியல் கட்சித் தலைவர்கள் பேசினார் அதை விரிவாக பார்க்கலாம்.
A.Raja MP
A.Raja MPpt desk

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியபோது, “தனிமனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் இன்னொரு ஆட்சி சரி செய்யலாம். நீதிமன்றம் அல்லது போராட்டம் மூலம் சரி செய்யலாம். ஆனால் எல்லா அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்கள் அதை தவறாக பயன்படுத்தி அநீதி இழைக்கும் போது நாடு ஸ்தம்பிக்கும். அத்தகைய காட்டாச்சியை எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். மதசார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றும் ஒரே தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என மற்ற மாநில தலைவர்கள் சொல்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தர வேண்டுமென கைது செய்துள்ளனர். சிறு, சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் துவங்கி பலரை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அதானி குழுமம் செய்த மோசடிகள் குறித்து விளக்கமளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். ஆனால் மோடி மௌனம் சாதிக்கிறார்.

public meeting
public meetingpt desk

காட்டாச்சி, ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி நடத்துபவர்கள், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கிவிட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள். அடுத்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெறும். அப்போது இந்திய பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கலைஞர் வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா இருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:

“தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதை தடுக்க மத்திய அரசு நினைக்கிறது. அதிமுக ஆட்சியில் நடந்த சோதனையின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில உரிமை, சுயாட்சியில் கைவைக்க மத்திய அரசு நினைக்கக் கூடாது.. அண்ணாமலை கும்பல்களே! அமித்ஷா கும்பல்களே! காலம் பதில் சொல்லும்”

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்:

“அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த 8 வருடத்திற்கு முன்பு நடந்த கோப்புகளை இன்றைய தலைமைச் செயலகத்தில் தேடுவதா? நியாயமா? விமான நிலையத்திற்கு வந்தபோது மின்சாரம் கட்டானல், பழி வாங்குவீங்களா? இ.பி.எஸ் மிரட்டப்பட்டார். அதனால்தான் அண்ணாமலை எவ்வளவு பேசினாலும் கூட்டணி தொடரும் என்கிறார் இ.பி.எஸ். சசிகலா, தினகரன், அன்புமணி தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார்கள்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிfile image

மாநில வாரியாக மிரட்டலை தொடர்கிறது மத்திய அரசு. வழக்கு இருப்பதைக் காட்டி செந்தில் பாலாஜியை மிரட்டியுள்ளனர். அதை எதிர்த்தது தான் இவ்வளவு கோவம் இவர்களுக்கு... செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு கொங்கு மண்டலத்தில் கிடைத்த தொடர் வெற்றிகள் அவர்களுக்கு பிடிக்கவில்லை. முதல்வரின் மக்கள் நல திட்டங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்” என்றார்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா:

“மோடி ஆட்சி கீழே விழும் வரை எங்களுடைய பணி தொடரும். செந்தில் பாலாஜி பின்பு நாங்கள் இருக்கிறோம். பாஜகவின் கோட்டை என கற்பனை கோட்டை கட்டி வந்தனர், அதை செந்தில் பாலாஜி தவிடுபொடியாக்கினார். 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றிபெறும். அதை பொறுக்காத பாஜக விரோத வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டது.

ED office
ED officept desk

கொங்கு மண்டலத்தை குறிவைத்து செந்தில் பாலாஜி மீது வக்ரத்தை காட்டியுள்ளது. 9 ஆண்டுகால ஆட்சியை ஊழல் ஆட்சியாக நடத்தி வந்துள்ளனர். புல்வாமா தாக்குதல் நடக்காமல் இருக்க, விமானம் அனுப்பி இருந்தால் தாக்குதல் தடுக்கப்படிருக்கும். ஆனால், ராணுவ வீரர்களின் சடலத்தின் மீது ஆட்சிக்கு வந்தது பாஜக. கர்நாடக தேர்தலில் ஊழல் குறித்து பேசிதான் தோல்வியை பெற்றுள்ளது பாஜக.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன்:

“செம்மொழி மாநாடு கூட்டம் நடத்தியதை போன்று, கண்டன கூட்டத்தையும் நடத்தியுள்ளீர்கள். கொங்கு மண்டலத்தில் திமுகவை சிறப்பாக வளர்த்து வந்துள்ளார் செந்தில் பாலாஜி. அதை தான் மத்திய அரசு விரும்பவில்லை. முதல்வரின் அறிக்கை, கட்சி சாராத மக்களுக்கு புரியும். ஆளுநரின் செயல்பாடுகள் மக்களுக்கு புரியும். இந்தியா முழுவதும் 25 கோடி இஸ்லாமிய சமுதாயம் உள்ளது. அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை ஏற்கின்றனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்PT Tesk

திராவிட மாடல் ஆட்சி சமூக நல்லிணக்கத்தை உருவகக்கும் ஆட்சி. இதை இந்தியா முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் ஏற்கின்றனர். முதல்வரின் முயற்சிக்கு இஸ்லாமியர்கள் என்றும் துணை நிற்பார்கள். அனைத்து சமூகத்தையும் ஒற்றுமைபடுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. மாநில அரசை இயங்காமல் செய்ய மத்திய அரசு இடையூறுகளை கொடுத்து வருகிறது”

விசிக தலைவர் திருமாவளவன்:

“பாஜகவின் குறி செந்தில் பாலாஜி இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். அவரை நிலைகுலைய வைக்கவே திட்டமிடுகின்றனர். காரணம் அகில இந்திய அளவில் கூட்டணி கட்சிகளை அவர் ஒருங்கிணைக்கிறார் என்பதால் தான். ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என அழுத்தமாக ஆதரிப்பவர் ஸ்டாலின் என்பதால் தான் இது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயல்கிறது. இதற்கு விசாரணை, புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்

RN Ravi
RN Ravipt desk

சிதறிக் கிடக்கும் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சூழல் கனிந்து வருகிறது. அவர்களை ஒருங்கிணைப்பதில் உறுதியாக இருப்பவர் அண்ணன் ஸ்டாலின். கொள்கை அடிப்படையில் பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து வெளியேற்ற உறுதியுடன் ஸ்டாலின் இருப்பதால் அவர்களுக்கு பொறுக்கவில்லை. ஆளுநர் மாளிகையா அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகமா என்று சிந்திக்கும் அளவுக்கு ஆர்எஸ்எஸ் காரர்களுடன் ஆர்.என்.ரவி கூட்டம் நடத்துகிறார். அரசியல் களத்தில் ஸ்டாலினை வீழ்த்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். அண்ணா... நீங்கள் துணிந்து முன்னேறுங்கள்; நாங்கள் உற்ற துணையாக இருப்போம்”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:

“ஒட்டு மொத்தமாக ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் மீது சிபிஐ-யை அவர்கள் ஏவுகிறார்கள், இவர்கள் நம் மீது பாய்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிராக மோடி, அமித்ஷா சர்வாதிகாரியாக செயல்படுகிறார்கள். ஆளுநர் வந்த நாள் முதல் எப்படி செயல்படுகிறார் என்பது மக்களுக்குத் தெரியும். இலாகாவை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. அதை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை யார் ஆளுநருக்குத் தந்தது?

PM Modi
PM ModiTwitter

ஆளுநர் மாளிகை இருக்கும் நிலத்தை பிரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க டி.ஆர்.பாலு அண்ணனை கேட்டுக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டப்படி ஊதியம் பெறுபவர் அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். கணவரை இழந்த பெண் என்பதால் நாடாளுமன்றம் திறப்புக்கு குடியரசு தலைவரை மோடி அனுமதிக்க வில்லை. அப்படியென்றால் மனைவியை இழந்த மோடி மட்டும் ஏன் திறந்து வைத்தார்?”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:

“தமிழ்நாட்டில் கை வைத்தால் அது தேன் கூட்டில் கை வைப்பது போன்றது.. அதற்கு இந்த கூட்டமே உதாரணம். முதலவர் சொன்னது போல திருப்பி அடித்தால் மட்டுமல்ல... நாங்கள் திமிறி எழுந்து பெருமூச்சு விட்டால் கூட தாங்க மாட்டீர்கள். செந்தில் பாலாஜி மீது புகார் என்றால் ஒத்துழைப்பு கொடுக்காமல் ஓடியா விடுவார்? விசாரணைக்கு தயாராக இருப்பவரை 18 மணி நேரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

amit shah
amit shahamit shah twitter page

அதிமுக ஒரு பரிதாப கட்சி... ஜெயக்குமார் ஒருநாள் ஒன்று பேசுகிறார்.. மறுநாள் ஒன்று பேசுகிறார். ஆளுநரை பார்த்து அமைச்சரை நீக்க மனு கொடுப்பது கேவலம் இல்லையா? செந்தில் பாலாஜியை அமைச்சராக இருக்கக் கூடாது என கூற ஆளுநருக்கு என்ன அருகதை உள்ளது?”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“செந்தில்பாலாஜி பூரண குணமடைய முதலில் வேண்டிக் கொள்கிறேன். அடுத்து ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். எந்த அடிப்படையில் முதலில் ஏற்றுக் கொள்லாமல் பின் ஏற்றுக் கொண்டீர்கள்? ஆளுநர் தன் உரையில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறுத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர்.

Annamalai
Annamalaipt desk

ஆளுநர் நீங்கள் அப்படியல்ல. முதல்வரை கில்லுக்கீரையாக பேச ஆரம்பித்து இருக்கிறீர்கள். ஆளுநரை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

“மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் கேள்வி கேட்கப்படுகின்றன. ஸ்டாலினை குறி வைக்கிறார்கள். சனாதனத்திற்கு எதிராக பேசக் கூடாது என நினைக்கிறார்கள். தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும்.. அதுதான் மோடிக்கும், ஆளுநருக்கமான பதில். செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடரக் கூடாது என கூறும் ஆளுநரிடம் கேட்கிறேன், ‘மோடிக்கு கீழ் இருப்பவர்கள் வழக்குகளுடன் அமைச்சர்களாக இருக்கலாமா?'

minister senthil balaji
minister senthil balajipt desk

ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. அந்த வெற்றி பயணத்திற்கு காரணம் நல்ல தொடக்கம்.. அது அவர்களுக்கு பொறுக்கவில்லை. ஆளுநர் ரவி, அண்ணாமலை இருவரும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகின்றனர். 9 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதையும் மோடி அரசு கொண்டு வரவில்லை. அவர் பெயரே ஸ்டாலின்.. அவரை எல்லாம் அடக்க முடியாது"

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு:

“குடும்பப் பிரச்னை போன்றது இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் தங்கள் இனத்தை சேர்ந்தவர்க்கு பிரச்னை என்றவுடன் தானாக சேர்ந்த கூட்டம் இது. மிக மிக கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவரை நோகடித்தவர்களை நீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டும்.

MP TR Balu
MP TR Balupt desk

கொங்கு மண்டல மக்கள் கிளர்ந்து எழுந்து இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் உங்கள் நடவடிக்கைகளுக்கு விசாரணை கமிஷன் நடக்கும். ஓராண்டு காலம் நெருப்பு ஆற்றில் நீந்தி தலைவர் உருவாக்கிய கட்சி இது. நானும் துரைமுருகனும் தலைவரும் நெருப்பு ஆற்றில் நீந்தியவர்கள். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை மறக்கக் கூடாது.

அண்ணாமலையை இப்போது தான் கோர்ட்க்கு அழைத்திருக்கிறேன். கோவை, கரூர், ஈரோடு, பழனி, நாமக்கல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் எல்லாம் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள்”

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி:

“சீண்டிப் பார்க்காதீர்கள் என முதல்வர் எச்சரித்துள்ளார். செந்தில் பாலாஜி என தனித்து பார்க்காதீர்கள். திமுகவை அச்சுறுத்திப் பார்க்க நினைக்கிறார்கள். பூச்சாண்டி காட்ட நினைக்காதீர்கள். மனித நேயத்தை தூக்கி எரிந்த விசாரணையாக இது உள்ளது. மீண்டும் காவிகளுக்கு இடமில்லை, அதை தீர்மானிக்கும் கூட்டணி இது. கொங்கு மண்டலத்தில் இருந்து தான் பெரியார் வந்தார். அது சரிந்த போது தூக்கிப் பிடித்தவர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் அரசியல் சூழ்ச்சி நடந்துள்ளது.

CM Stalin
CM Stalinpt desk

இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கூட்டணி திமுக. அதை முறிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறது. எங்களுடைய வண்ணங்கள் முக்கியமில்லை, எண்ணங்கள் தான் முக்கியம். ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க தலைமைச் செயலகத்தினுள் செல்கிறார்கள்.. உள்ளே சென்றார்களே, என்ன எடுத்தாங்க? வரும்போது என்ன கொண்டு வந்தாங்க?”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com