158 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி - அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

158 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி - அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்
158 தொகுதிகளை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி - அடுத்த முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக தொகுதிகளில் வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் திமுக முன்னிலை பெற்றாலும் அதிமுகவும் கடுமையான போட்டியை தந்தது. எனினும் நேரம் செல்லச்செல்ல திமுக அதிக இடங்களில் வென்று வெற்றியை உறுதி செய்தது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னணி மற்றும் வெற்றியுடன் சேர்த்து 158 இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது.

இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளை வெல்லும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெல்லும் நிலையில் உள்ளது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தலா 4 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் இரண்டும் தலா 2 இடங்களிலும் வெல்லும் நிலையில் உள்ளன. திமுக கூட்டணியில் பிற கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வென்றுள்ளன.

திமுக தனிப்பெரும்பான்மை பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை பறிகொடுக்கிறது. அதிமுக 68 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை எந்த ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை.

நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறையாக ஆட்சியமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள். இதனை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திற்கு இயக்க ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் உழைத்ததற்கு கிடைத்த பாராட்டுப் பத்திரமாகவே நினைத்து பாதுகாப்பேன்.

திமுக மீது வீசப்பட்ட அனைத்து அவதூறு சொற்களையும் ஓரங்கட்டிய மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வெற்றிக்காக உழைத்த கோடான கோடி உடன் பிறப்புகளுக்கும், கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல் கொள்கைவாதிகளின் கூட்டணியாக திமுகவுடன் இணைந்து தோள் கொடுத்த அனைத்துக் கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் நன்றி.

திமுக வென்றது; அதைத் தமிழகம் சொன்னது. இனித் தமிழகம் வெல்லும் அதை நாளைய தமிழகம் சொல்லும்” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து:

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்ட்ரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேச மற்றும் மாநில முன்னேற்றத்திற்காகவும், கொரோனா பெருந்தொற்றை முறியடிக்கவும் இணைந்து பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றிட ஒன்றிணைந்து போராடுவோம் என காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com