மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை: ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
மகளிர் விடுதலையே, மனிதகுலத்தின் விடுதலை என்று திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் விடுதலைக்காகப் போராடுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் திமுக முன்னணியில் இருப்பதாகக் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை நினைவுகூர்ந்துள்ள ஸ்டாலின், பெண்கள்-மகளிர் பாதுகாப்புக்காக ஈவ்டீசீங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், அவற்றுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக குரல் எழுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் ஆற்றல் முன்எப்போதையும் விட பெருகி வருவதாகவும், பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு உலக மகளிர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வாதாகவும் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.