“எத்தனை கோடி கொடுத்தாலும் சுஜித்துக்கு ஈடாகாது” - பிரேமலதா விஜயகாந்த்
சுஜித்தின் இறப்பிற்கு எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் ஈடாகாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆறுதல் கூறினார். அத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2 வயது குழந்தை சுஜித்தின் மரணம் உலகையே உலுக்கியுள்ளது. சுஜித்தின் மரணம் எல்லோருக்குமான பாடமாக அமைய வேண்டும். ஆழ்துளை அமைப்பவர்கள் பொறுப்போடு அதனை மூட வேண்டும். எல்லா ஆழ்துளைக் கிணறுகளையும் மூடுவதற்கு தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் இறப்பிற்கு ஈடாகாது. சிறுவனை மீட்க மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு சுஜித்தை உயிரோடு மீட்டெடுக்க கடுமையாக போராடியுள்ளது.
சுஜித் உயிரோடு வந்திருந்தால் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். சுஜித்தின் மரணம் இறுதியாக இருக்க வேண்டும். குறை சொல்வதை விட, இதனை பாடமாக எடுத்துக்கொண்டு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.