திமுகவா.. அதிமுகவா.. தேமுதிக எந்தப் பக்கம்? கட்சி அங்கீகாரத்துக்கான போராட்டம்!
விழுப்புரம் தொடங்கி விருதுநகர் வரை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவலான வாக்கு வங்கியைத் தன்வசம் கொண்டுள்ள தேமுதிக, வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. காங்கிரஸ் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி தொடர்பான தன்னுடைய முடிவை அறிவிக்க தேமுதிக முடிவு செய்திருக்கிறது எனத் தகவல்கள் வெளியுள்ளன. காங்கிரஸ் முடிவால் தன் பேர சக்தி அதிகரிக்கும் என்று அக்கட்சித் தலைமை நம்புகிறது.
கட்சிக்கான அங்கீகாரத்தைப் பாதுகாத்திட வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 6 விழுக்காடு வாக்குகளையும், 8 தொகுதிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதற்காக 20 தொகுதிகள் வேண்டும் என அக்கட்சி பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்ற அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரட்டை இலக்கத் தொகுதிகளைப் பெற்றால் மட்டுமே கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நிர்வாகிகள் அளிக்கும் அழுத்தத்தால், தேமுதிக தலைமை தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.
ஆனால், தேமுதிகவைத் திராவிடக் கட்சிகள் உதாசீனப்படுத்த முடியாததற்கு அதன் கேம்சேஞ்சர் எனும் ஆட்டக் குலைப்பர் வரலாறே சாட்சி. 2006-இல் அதிமுகவின் தொடர் ஆட்சிக் கனவைத் தகர்த்தது முதல் 2016-இல் திமுகவின் வெற்றி வாய்ப்பைத் திசைதிருப்பியது வரை தேமுதிக ஒரு முக்கிய சக்தியாகவே இருந்துள்ளது. தற்போது தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் வல்லமை தேமுதிகவிற்கு இருக்கிறது.
தேமுதிகவின் பலம், வெறும் எண்களில் மட்டுமல்ல, விஜயகாந்த் மீதான பற்றால் அந்தக்கட்சி சமூகரீதியாகவும் வேர்விட்டுள்ளது. வடமாவட்டங்களில் வன்னியர் சமூகத் தளத்திலும், தெற்கில் நாயுடு சமூக மக்கள் மத்தியிலும், தமிழகம் முழுவதுமுள்ள கிராமப்புறங்கள் மற்றும் பட்டியலின மக்கள் மத்தியிலும் தேமுதிகவின் செல்வாக்கு ஊடுருவியுள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸின் முடிவால் தனது பேரசக்தி அதிகரிக்கும் என தேமுதிக நம்புகிறது. இதற்கிடையே, முதல் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேமுதிகவுக்கு 50 தொகுதிகள் வரை வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தேமுதிகவுக்கு ஒரு மாற்றுப் பாதையைத் திறந்துவிட்டுள்ளது.
திமுக, அதிமுக அல்லது தவெக - இதில் யாருடன் கைகோர்த்தால் தனது செல்வாக்கை வெற்றிக்கணக்காக மாற்ற முடியும் என்பது குறித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இவை ஒருபுறமிருக்க உட்கட்சி நெருக்கடியையும் சந்தித்து வருகிறார் பிரேமலதா, 20 ஆண்டுகள் அனுபவம் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

