தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தல் வரும் வியாழன் அன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரப்புரை மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் தீவிரமாக நடந்து வந்தன. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் அவர்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடும் வெயில் என்றும் பாரமால் மக்கள் மத்தியில் அவர்கள் பரப்புரை செய்து வந்தனர்.
அனைத்து தலைவர்களையும் தேர்தல் களத்தில் காண முடிந்த மக்களால், தேமுதிக தலைவர் விஜயகாந்தை மட்டும் காணமுடியவில்லை. இதனால் விஜயகாந்த் எப்போது பிரச்சாரம் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அக்கட்சியினரும் விஜயகாந்த் விரையில் பரப்புரையில் ஈடுபடுவார் என்று கூறிக்கொண்டே வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டு, வாக்கு சேகரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் இன்று வடசென்னையில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வில்லிவாக்கத்தில் கூட்டணிக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாகனத்தில் அமர்ந்தபடி விஜயகாந்த் வாக்குசேகரித்தார்.