ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..!

ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..!
ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..!

தீபாவளியை முன்னிட்டு கோவையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி, அவர்களை நீராட வைத்து புத்தாடை அணிவித்து அழகு பார்த்துள்ளனர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் ஆதரவற்றவர்கள் அமர்ந்திருப்பதை காண முடியும். ஒவ்வொருவர் முகத்திலும் சொல்லப்படாத கதையும் சொல்ல முடியாத சோகமும் நிச்சயம் இருக்கும். கொஞ்சமாவது பணமிருந்தால்தான் அன்றாட வாழ்க்கையையே கடக்க முடியும் என்கிறபோது, பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம். அவரவர் வசதிக்கேற்ப அவரவர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அப்படியிருக்க ஆதரவற்றவர்கள் என்ன செய்வார்கள்? இந்த கேள்விக்கு தங்கள் செயலால் பதில் தந்துள்ளனர் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர்.

ஆதரவற்றவர்களை தேடிச் சென்று அவர்களின் சிகையை திருத்தி, நீராட வைத்து, புத்தாடை அணிவித்து, இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி என்ற சொல்லை "தீபம்" மற்றும் "ஆவளி" என இரண்டாக பிரிக்கலாம். "ஆவளி" என்றால் வரிசை எனப்பொருள். ஈரநெஞ்சம் அறக்கட்டளையினரோ "ஆவளியை" "அளி" அதாவது "வழங்கு" என்றாக்கியிருக்கிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். அவரின் கூற்றை மெய்பித்துள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பிறருக்கு முன்மாதிரி ஆகியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com