தமிழகம் முழுவதும் தீப ஒளித்திருநாளை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியலை முடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுகின்றனர். காலை நேரத்திலேயே பலர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். பலகாரம் உள்ளிட்ட திண்பண்டங்களை அக்கம்பக்கத்தினருடன் பறிமாறிக் கொள்கின்றனர். காலை 6 மணி முதல் 7 மணி வரையே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டதால், ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
பிறநாள்களில் காலையில் சீக்கிரம் எழ அடம்பிடிக்கும் குழந்தைகள், தீபாவளியான இன்று அதிகாலையில் எழுந்து ஆர்வத்துடன் வெடி வெடித்தனர். அவர்களுக்கு போட்டியாக இளைஞர்களும், பெரியவர்களும் களமிறங்கி பட்டாசு வெடித்தனர். தலை தீபாவளி கொண்டாடும் தம்பதிகள் வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிபெற்று தீப ஒளித்திருநாளை கொண்டாடி வருகின்றனர். இதே போல் நாட்டின் பிற இடங்களிலும் தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.