தீபாவளி: 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு மதுபானக் கடைகளில் 4 நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 6-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கொண்டாட்டம் என்பதுபோல மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு மதுபானக் கடைகளில் 4 நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது தெரியவந்திருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மூலம் கடந்த 3-ம் தேதி 124 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நவம்பர் 4-ம் தேதி 148 கோடிக்கும், நவம்பர் 5-ம் தேதி 150 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தீபாவளியன்று மட்டும் 180 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் 320 கோடி ரூபாய்க்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தீபாவளி மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள் ஆகிய இரு தினங்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது 200 கோடி ரூபாய்க்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருநாட்களில் மட்டும் 244 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டு தீபாவளியை காட்டிலும் இந்தாண்டு 34 புள்ளி 5 சதவீதம் அளவுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது.