அமெரிக்காவிலும் அம்மா கை பக்குவம் : வெளிநாட்டுக்கு பறக்கும் தீபாவளி பலகாரம் !
திருவிழா காலங்களில் முறுக்கு, அதிரசம், ஊறுகாய் என தங்கள் அம்மா செய்த தின்பண்டங்களை வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் சில நிறுவனங்கள்.
வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு திருவிழா காலங்களில் தங்கள் அம்மா செய்த தின்பண்டங்களை தவற விடுகிறோமே என்ற ஒரு ஏக்கம் இருப்பது வழக்கம். அதேநேரத்தில் அவர்களது ஏக்கத்தை தீர்க்க வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.வளமான வாழ்க்கையைத் தேடி சொந்த ஊரை விட்டுச்சென்று அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் என அன்னிய மண்ணில் பணிபுரியும் தமிழர்கள் எண்ணிக்கை ஏராளம். இதனால், நிறைய பணம் சம்பாதிக்க முடிந்தாலும் பாசத்தை இழக்க வேண்டியிருப்பதை அவர்கள் மிகவும் வேதனையாக உணர்கின்றனர்.
குறிப்பாக உணவு சார்ந்த விஷயங்களில் நம் ஊர் ருசியை, உணவு வகைகளை, பலகாரங்களை நிறையவே இழக்கிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் மகனுக்கும், மகளுக்கும், பேரன். பேத்திக்கும் தங்கள் கையால் செய்த தின்பண்டங்களை தர இங்குள்ள அவர்களது குடும்பத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் ஆசையை பூர்த்தி செய்வதற்கென்றே சில நிறுவனங்கள் சென்னையில் இயங்குகின்றன. இவை, வீடுகளில் செய்யப்பட்ட தின்பண்டங்களைப் பெற்று, உரிய முறையில் பேக் செய்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றன.
தேன்குழல் முறுக்கு, அதிரசம், ஊறுகாய், ரசப் பொடி, சாம்பார் பொடி என வெளிநாடு செல்லும் வீட்டுத் தயாரிப்புகளின் பட்டியல் மிக நீளமானது. உணவுப்பொருள்தான் என்றில்லை. கொலு பொம்மைகளும், பல உயிர் காக்கும் மருந்துகளும் கூட, உரிய ஆவணங்களுடன் இங்கிருந்து பறக்கின்றன. இது மட்டுமல்ல. இது போன்ற சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பொருட்களின் விலை மதிப்பு குறைவுதான் என்றாலும், அதைவிட கூடுதலான தொகை கொடுத்து அவற்றை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பது - பணத்தை பாசம் வென்றதை காட்டுகிறது.