மதக்கலவரங்களை தடுக்க மாவட்டந்தோறும் குழு - அமைப்பு முறையும், செயல்பாடும் என்ன?

மதக்கலவரங்களை தடுக்க மாவட்டந்தோறும் குழு - அமைப்பு முறையும், செயல்பாடும் என்ன?
மதக்கலவரங்களை தடுக்க மாவட்டந்தோறும் குழு - அமைப்பு முறையும், செயல்பாடும் என்ன?

மதக்கலவரங்களை தடுக்க கோவையைப் போன்று, மாவட்டந்தோறும் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள குழுவின் அமைப்பு முறை, செயல்பாடுகள் என்ன? இதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான அவசியம் குறித்து தெரிந்துகொள்வோம்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகளின் 3 நாட்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மதக்கலவரங்களை தடுப்பதற்கு கோவையில் இருப்பது போன்ற தனி குழு, மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார்.

இந்த நிலையில் மதக்கலவர தடுப்புக் குழு பற்றிய புரிதல் அவசியமாகிறது. 1997ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கலவரம், 1998ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்வங்களைத் தொடர்ந்து, அந்ந நகரில் மதக்கலவர தடுப்பு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. காவல் ஆணையர் தவிர, உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், அலுவலக பணிக்கு 5 பேர், களத்தில் பணிபுரிபவர்கள் சுமார் 15 பேர் என 25 முதல் 27 பேர் இக்குழுவில் உள்ளனர்.

களத்தில் பெரும்பாலும் தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் அளவிலான அலுவலர்கள் கண்காணிப்பில் உள்ளனர். புலனாய்வில் கிடைக்கும் தகவல்களை இக்குழுவினர், நேரடியாக காவல் ஆணையருக்கு தெரியப்படுத்துவர். இவர்கள் சாதாரண உடையிலேயே மக்களோடு மக்களாக இருந்து கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நேரடியாக கலந்து கொள்ளாமல் இருந்தாலும், அதனை முன்கூட்டியே கணித்து சொல்ல வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கு உள்ளது. சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனையும் தீவிரமாக கண்காணிக்கிறது இக்குழு.

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு பிரிவும், மத கலவரங்களை கண்காணிக்கும் குழுவும் உள்ளது என்றாலும், அவற்றில் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலேயே நபர்கள் இருப்பார்கள். தற்போது முதல்வரின் அறிவிப்பு என்பது, மாவட்டம்தோறும் இந்த குழுவை பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com