விபத்து காப்பீடு வழங்காமல் போக்குக்காட்டிய இந்தியன் வங்கி - நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி ஆணை!

வாடிக்கையாளருக்கு விபத்து காப்பீடு வழங்க மறுத்த திருவாரூர் இந்தியன் வங்கிக்கு ரூபாய் ஐம்பதாயிரம் இழப்பீடு மற்றும் இரண்டு லட்சம் காப்பீடு தொகை வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
indian bank
indian bankFile Image

திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் ஐ.பி கோவில் மேல தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் தியாகராஜன் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, கடந்த 2020 அக்டோபர் 10ம் தேதியன்று மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார்.

தியாகராஜன், இந்தியன் வங்கியில் பல ஆண்டுகளாக கணக்கு வைத்து வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார். அதன்படி இந்தியன் வங்கியில் வங்கியின் மூலம் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷுரன்ஸ் கம்பெனி , ரூபே கார்டு தியாகராஜனுக்கு வழங்கப்பட்டு அதன் மூலம் அவர் பணபரிவர்த்தனை செய்து வந்துள்ளார்.

தியாகராஜன் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்த சமயத்திலும், அவர் ரூபே கார்டு பெற்ற சமயத்திலும் ரூபே கார்டின் மூலம் விபத்து இன்ஷுரன்ஸ் காப்பீட்டு செய்யப்பட்டுள்ள விவரத்தை எழுத்துப் பூர்வமாக தியாகராஜனுக்கு தெரியப்படுத்தவில்லை. தியாகராஜன் இறந்ததும் காப்பீடு தொகை பெற 88 நாட்களுக்குப் பின்னரே இந்தியன் வங்கியின் மூலம் இன்ஷுரன்ஸ் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்டுவிட்டு உடனடியாக இந்தியன் வங்கியின் மூலம் முறையாக 90 நாட்களுக்குள் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பியுள்ளார்.

தியாகராஜன் பயன்படுத்தி வந்த ரூபே கார்டுக்கான காப்பீட்டுத் தொகையை அவரது மனைவி மகேஸ்வரிக்கு வழங்காமல் சேவை குறைபாடு செய்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கடந்த 2021 செப்டம்பர் 2ம் தேதியன்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தியாகராஜனின் மனைவி மகேஸ்வரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சக்கரவர்த்தி, ''புகார்தாரரின் கணவர் இறப்பதற்கு முன்னதாக 45 நாட்களுக்குள் ரூபே ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பலமுறை பண பரிவர்த்தனைகள் செய்துள்ளதால் புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்கள் புகார்தாரரின் கணவர் இறப்பிற்கான இன்ஷுரன்ஸ் காப்பீட்டு தொகை கொடுக்க கடமைப்பட்டவர் என இந்த ஆணையம் கருதுகிறது.

புகார்தாரர் அவரது கணவர் மறைவிற்கு பின்னர் இந்தியன் வங்கியின் மூலம் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கு அவரது கணவரின் காப்பீட்டு தொகையை கோருவது ஏற்புடையதாக இந்த ஆணையம் கருதி இன்று (ஏப்.,21) தேதி புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்கள் சேர்ந்தோ, தனித்தோ ரூபே ஏடிஎம் கார்டில் உள்ள இன்ஷுரன்ஸ் காப்பீட்டு தொகையான ரூ.2 லட்சத்தை வழங்க வேண்டும்.

புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு எதிர்தரப்பினர்கள் சேர்ந்தோ, தனித்தோ ரூ.50,000/-த்தை இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு செலவுத் தொகையாக ரூ.5,000/-த்தை இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்கள் சேர்ந்தோ, தனித்தோ வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மேற்படி தொகைகளில் (வழக்கு செலவு தொகை நீங்கலாக) உத்தரவு பிறப்பித்த தேதியிலிந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்'' என்று ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com