எம்.பி - அமைச்சருக்கு இடையே வாக்குவாதம்! தள்ளுமுள்ளில் கீழே விழுந்த மாவட்ட ஆட்சியர்! நடந்தது என்ன?

ராமநாதபுரம் அரசு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த எம்.பி நவாஸ் கனி வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதால், அமைச்சர் மற்றும் எம்.பி ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
அமைச்சர்- எம்.பி இடையே மோதல்
அமைச்சர்- எம்.பி இடையே மோதல்PT Desk

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை, ஒரு தனியார் பள்ளியில் நேற்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியும், அமைச்சர் ராஜகண்ணப்பனும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எம்.பி வருவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நிகழ்ச்சி!

பரிசு வழங்கும் நிகழ்ச்சி 3 மணிக்கு துவங்க இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரம் குறைவாக இருந்ததால் மூன்று மணிக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மணிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, தான் வருவதற்கு முன் ஏன் நிகழ்ச்சியை தொடங்கினீர்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

எம்.பி நவாஸ் கனி - அமைச்சர் ராஜகண்ணப்பன் மோதல்
எம்.பி நவாஸ் கனி - அமைச்சர் ராஜகண்ணப்பன் மோதல்PT Desk

அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியை மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளில் கீழே விழுந்த மாவட்ட ஆட்சியர்!

தள்ளுமுள்ளு அதிகமானதில், அமைச்சர் - எம்.பிக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரனை அமைச்சர் - எம்.பி.யின் ஆதரவாளர்கள் தள்ளியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு போலீசார் அவரை தூக்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்PT Desk

அதற்குபிறகு போலீசார் தள்ளுமுள்ளில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இதனையடுத்து விழாவில் கலந்து கொள்ளாமல் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

“மாவட்ட ஆட்சியரின் தவறு! எனக்கும் அமைச்சருக்கும் எந்த பிரச்னையும் இல்லை!” - எம்.பி நவாஸ் கனி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு அளிக்கும் விழா 3 மணிக்கு நடைபெறுகிறது என்றும், அதில் கலந்து கொள்ளுங்கள் என்றும் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

எம்.பி நவாஸ் கனி
எம்.பி நவாஸ் கனி PT Desk

நிகழ்ச்சி முன்னதாக தொடங்குவதாக இருந்தால் முன்கூட்டியே எனக்கு தகவல் தெரிவித்து இருக்கலாமே என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டேன். மாவட்டத்திற்கு புதிதாக வந்த ஆட்சியர் என்பதால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆட்சியருக்கு தெரியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் குறித்து தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கும் அமைச்சருக்கும் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை” என தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் - எம்.பி இடையேயான வார்த்தை மோதலும், ஆட்சியர் கீழே விழுந்த நிகழ்வும் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவை, இங்கே காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com