ரயிலை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்: நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்
காஞ்சிபுரத்தில் நீதிமன்றம் உத்தரவுப்படி ரயிலை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றபோது, ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு வரை ரயில் தடம் விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் இடத்தை குறைவான அளவில் அரசு எடுப்பதால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசித் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, அப்துலுக்கு இழப்பீடாக 1 கோடியே 38 லட்சம் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இல்லையேல் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர், அந்த வழியாக செல்லும் திருப்பதி-புதுச்சேரி ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் காஞ்சிபுரம் புது ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த திருப்பதி ரயிலை ஜப்தி செய்வதற்காக, நீதிமன்ற நோட்டீஸை கொடுக்க முயன்றனர். அப்போது ரயிலை இயக்கிய ஒட்டுனர் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் ரயிலை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மனுதாரர், “எங்களுக்கு தரவேண்டிய உரிய இழப்பீடு தராத காரணத்தினால் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது வரை எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலகத்தின் அசையா சொத்துக்கள் மற்றும் பாண்டிச்சேரி-திருப்பதி ரயில் இன்ஜின் ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களையும் அசையா சொத்துக்களையும் ஜப்தி செய்ய வந்தோம். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருநாள் அவகாசம் கேட்டனர். இதன் காரணமாக ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றோம்.
தற்போது வரை எங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்காத காரணத்தினால், முதல்கட்டமாக பாண்டிச்சேரி-திருப்பதி ரயில் இஞ்சினை ஜப்தி செய்ய முயன்றோம். ஆனால் ரயில் ஓட்டுநர் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல் ரயிலை இயக்கி சென்றார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்கும்போது, நீதிமன்றம் கொடுக்கச்சொல்லி இருக்கக்கூடிய இழப்பீடு தொகை வழங்குவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.