"முகிலன் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை" - முகிலன் மனைவி
முகிலன் காணாமல்போன விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் திருப்தி இல்லை என முகிலனின் மனைவி தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் காணமல் போனார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே முகிலனை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசை வலியுறுத்தும் விதமாகவும் 'முகிலனை தேடி' என்கிற முழக்கத்துடன் முகிலன் மனைவி பூங்கொடி தலைமையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து ஒரு குழுவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு நீதிக்கேட்டும் , முகிலனை தேடியும் மனித உரிமை ஆர்வலர் பாத்திமா தலைமையில் தூத்துக்குடியில் இருந்து ஒரு குழுவும் சென்னை நோக்கி நேற்று பயணத்தை துவங்கினர்.
பூங்கொடி தலைமையிலான குழுவை சேர்ந்த 12 பேர் ரயில் மூலம் இன்று திருச்சிக்கு வந்தனர். அவர்களுக்கு, திருச்சியில் உள்ள பல்வேறு சமூக நல அமைப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பூங்கொடி பேசும்போது, “ முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. நீதிமன்றத்தைதான் நாங்கள் முழுமையாக நம்பி உள்ளோம். நாளை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் சென்னை செல்கிறோம்” என்றார். தூத்துக்குடியிலிருந்து பாத்திமா தலைமையில் வரும் குழுவும் பூங்கொடி தலைமையிலான குழுவும் திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு செல்கின்றனர் .