தேர்வு எழுத விடாமல் இடையூறு : ஆட்சியர் மீது மாணவி புகார்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத முடியாதபடி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவி ஒருவர் குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியின் மகள் சங்கமப்பிரியா, இலங்கியம்பட்டி அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிறவியிலேயே நரம்பு பாதிப்பு இருப்பதால், பொதுத் தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் கோரி முறையான ஆவணங்களுடன் தேர்வுத்துறையிடம் அவர் விண்ணப்பித்துள்ளார். அதன் பேரில் கிடைத்த அனுமதியின்படி ஒருமணி நேரம் கூடுதல் அவகாசத்துடன் சங்கமப்பிரியா தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் தன்னை மருத்துவ பரிசோதனை செய்ய ஆணை அனுப்பப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள சங்கமப்பிரியா, தேர்வு நடக்கும்போதே மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டதாக கூறினார். இதனால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கூறினார். இது வழக்கமான நடவடிக்கையே தவிர, உள்நோக்கம் கொண்டதல்ல என தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் விளக்கமளித்துள்ளார்.

