காவல் நிலையங்களில் உள்ள சிலைகளை அகற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

காவல் நிலையங்களில் உள்ள சிலைகளை அகற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

காவல் நிலையங்களில் உள்ள சிலைகளை அகற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
Published on

தமிழக காவல் நிலையங்களில் உள்ள சிலைகள் மற்றும் கோயில்களை அகற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த பாண்டிராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், 'விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் காவல் நிலையம் முன்பாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் என்பது குறிப்பிட்ட சமூகத்தினரையோ, மதத்தையோ சார்ந்தது அல்ல. அனைத்து சமூகம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தை அணுகுவார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்ட மத அடையாளம் பூசும் வகையில், கடவுள் சிலைகளை வைப்பது ஏற்கத்தக்கதல்ல. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் அமுதூர் காவல் நிலையம், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம், சிவகாசி இ.புதூர் காவல் நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சில காவல் நிலைய எல்லைகளில் கோயில்களும் உள்ளன. ஆனால் இதற்காக முறையான அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை.

காவல் நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை பூசும் வகையில் இதுபோல செயல்படுவது விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக நடவடிக்கைக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழக காவல் நிலையங்களில் உள்ள சிலைகள் மற்றும் கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, காவல் நிலையங்களில், சிலைகள், கோயில்கள் இருப்பதால் மனுதாரருக்கு என்ன பிரச்னை? மனுதாரர் பிரச்னையை உருவாக்க விரும்புவதுபோல் தெரிகிறது. மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிகிறது' என தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com