திருப்பதியில் 240 சவரத்தொழிலாளர்கள் பணி நீக்கம் : பக்தர்களிடம் பணம் வசூலித்ததாக புகார்
திருப்பதியில் பக்தர்களிடம் கட்டாயமாக பணம் வசூல் செய்ததாக 240 சவரத்தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தில் நிரந்தர சவரத்தொழிலாளர்கள், ஸ்ரீ வாரி சேவா சவரத் தொழிலாளர்கள் என இருபாலரும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களிடம் பணம் வசூல் செய்யாமல் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சவரத் தொழிலாளர்கள் பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் ஒரு மொட்டைக்கு 11 ரூபாய் சம்பளம் பெற்று வரும் 240 சவரத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட சவரத் தொழிலாளர்கள் கண்ணீருடன் இணை செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு முன் மூன்று முறை எச்சரிக்கை விடுத்தும் பணம் வசூல் செய்ததால், பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உணவு அருந்தாமல் இருந்த நிலையில் சுமதி, மோகனா என்ற சவரத் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். மயங்கி விழுந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.