முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது போன்றவற்றின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி, மற்றும் இதர அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தன்னுடைய கைப்பாவையான முதலமைச்சர் பழனிசாமி, மற்றும் அமைச்சர்களோடு சேர்ந்து பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு ஏதுவாக காவல்துறை வாகனங்கள், சிவப்பு விளக்குகள் பொறுத்தப்பட்ட அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ மகிழுந்துகள் போன்ற மாநிலத்தின் நிர்வாக இயந்திரங்களை இவர்கள் தவறாக பயன்படுத்தியதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் அளித்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் கூறியுள்ளார். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதை ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அபாரதத்துடன் கூடிய ஒரு வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுகல் சி சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், செல்லூர் கே.ராஜூ, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோரை உடனடியாக அழைத்து, அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில், அரசியலமைப்பின் மதிப்பையும், அற நெறிமுறைகளையும் பாதுக்காக்கும் வகையில் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஜனநாயகம் மற்றும் மாநில நலன் கருதி, அதிமுக அரசில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என ஆளுநரை ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கடிதத்தை மும்பையில் உள்ள தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் திமுக எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com