தமிழக மாணவருக்கு குஜராத்தில் பாகுபாடு: தற்கொலை முயற்சி
குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக தலித் மாணவர் மீது பாகுபாடு காட்டப்பட்டதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்துள்ளது.
தலித் என்பதால் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாரிராஜ் என்ற மாணவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பேராசிரியர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த மாணவர், விடுதியில் தூக்க மாத்திரைகளை அதிகளவில் உண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. ஆனால், பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்துள்ள புகாரை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
தற்கொலைக்கு முயன்ற மாணவர் மாரி ராஜ், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர். ஏற்கனவே எய்ம்ஸ் மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்து போன விஷயமே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்னொரு தமிழக மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.