“பிறக்கும் போதே நீங்கள் அரசியல்வாதியாக பிறந்தீர்களா?” எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டம்
ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் உள்ளதா என திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வியெழுப்பி உள்ளார். தங்களை உயர்த்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் போது, அதை குற்றஞ்சொல்வது சரியா என்றும் அவர் வினவியுள்ளார். நெல்லை மாவட்டம் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்த தமிழ் நடிகனை வளர்த்தது யார்? தமிழர்கள். தமிழ்நாடு. இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் அவரை வளர்த்திருக்கிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, கேரளாவிலும் விஜயை கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவிலும் கொண்டாடுகிறார்கள். அமெரிக்கா சென்றால் அங்கிருக்கும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு நடிகனாக அவர் எதாவது செய்துதானே ஆக வேண்டும்.
மக்களால் உயர்த்தப்பட்ட ஒரு நடிகன், அரசியலுக்கு வரக் கூடாது என்று சட்டம் ஏதேனும் உள்ளதா? நடிகன் அரசியலுக்கு வரக் கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா? அப்புறம் ஏன் இவர்களுக்கு எரிகின்றது? தன்னை வளர்த்துவிட்ட மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கும் போதே, அய்யய்யோ..அய்யய்யோ நீ உன் வேலையை பாரு என்கிறார்கள். நீங்களெல்லாம் பிறக்கும் போதே அரசியல்வாதியாக பிறந்தீர்களா” என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.