பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 20 ஆயிரத்து 600 இடங்களுக்கு 11,140 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பத்தேதி நிறைவடைந்த பின்னரும் தேதி குறிப்பிடாமல் கால அவகாசத்தை நீட்டித்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம். தமிழகத்தில் 55 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 20600 இடங்கள் உள்ளது. மே மாதம் 7ம் தேதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்கியது. விண்ணப்பிக்க மே 23 கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று வரை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு முதலாம் ஆண்டில் சேருவதற்கு 11,140 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நேரடியாக பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு சேர்வதற்கு 12,184 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று விண்ணப்பம் செய்ய இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 100% மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை பெற்று அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பிற்கு பிறகு இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.