திண்டுக்கல்: மாணவி மர்ம மரணம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் பள்ளி வளாகத்தில் 9 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனையடுத்து உடலை வாங்க மறுத்த உறவினர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரில் வசித்து வருபவர் சத்யராஜ். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மூன்று குழந்தைகளும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலை 11 மணி அளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வகுப்பறைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாதி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மிகவும் ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து தாண்டிகுடி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே குழந்தையின் மர்ம மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்களை சமாதானம் செய்ய வந்த பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.