திண்டுக்கல் | வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி மளிகை கடைக்காரரிடம் மோதிரம் பறிப்பு!
செய்தியாளர்: திவ்யஸ்வேகா
வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெரும்பு சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (65). மளிகைக் கடை வைத்துள்ள இவர், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் தனது மருமகளை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் தனது கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லைமேடு பகுதி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் இவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, தான் வருமான வரித்துறை அதிகாரி எனறு கூறியுள்ளார்.
இதையடுத்து தாங்கள் வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளீர்கள் என்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு ஊருக்கு வாங்க விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பழனிச்சாமி இதுகுறித்து தனது ஊருக்கு வந்து விசாரித்துள்ளார். பொழுது அங்கு யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.