Dindigul district assembly constituency updates
Dindigul web

திண்டுக்கல் | யாருடைய கரம் ஓங்குகிறது? சமூகக் காரணிகளும் தேர்தல் கணிப்பும் என்ன?

தமிழக அரசியலில் தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போது திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது.
Published on

தமிழகத்தின் பரப்பளவில் முதலிடம் வகிக்கும் திண்டுக்கல் மாவட்டம், வீரத்திற்கும் விளைச்சலுக்கும் பெயர்பெற்றது. 1985-இல் மதுரையிலிருந்து பிரிந்த இம்மாவட்டம், இன்று ஆன்மிகம், இயற்கை மற்றும் தொழில்துறையின் சங்கமமாகத் திகழ்கிறது நகரின் மையத்தில் 'திண்டு' வடிவ மலையில் அமைந்துள்ள மலைக்கோட்டை, நாயக்கர் கால வரலாற்றைப் பறைசாற்றுகிறது. புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் நாவிற்கு விருந்தளிக்கும் சீரகச் சம்பா பிரியாணி ஆகியவை மாவட்டத்தின் அடையாளங்கள்.

’மலைகளின் இளவரசி' கொடைக்கானல் மற்றும் நவபாஷாணச் சிலையோடு அருள்பாலிக்கும் பழனி முருகன் கோயில் உலகப் பயணிகளைக் கவர்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகள் திமுக வசமும், 3 தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.

ஆத்தூர் தொகுதி: அமைச்சர் ஐ. பெரியசாமி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆத்தூர் தொகுதி, திமுகவின் எஃகு கோட்டையாக விளங்குகிறது. கடந்த 5 தேர்தல்களில் 4-இல் திமுக வெற்றி பெற்றுள்ளது. கவுண்டர், பிள்ளைமார் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அதிகமுள்ள இத்தொகுதியில், திமுக இதுவரை 9 முறை வெற்றி வாகை சூடியுள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதி: அமைச்சர் சக்கரபாணி 1996 முதல் தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்று சாதனை படைத்துவரும் தொகுதி இது. கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், திமுக 9 முறை வென்றுள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 முறையே இங்கு வென்றுள்ளன.

kodaikanal
kodaikanal web

பழனி தொகுதி: செந்தில்குமார் எம்.எல்.ஏ வசம் உள்ள பழநியில், பிள்ளைமார் மற்றும் கவுண்டர் சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கின்றனர். கடந்த 5 தேர்தல்களில் 3-இல் திமுக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்று ரீதியாகவும் திமுக இங்கு 6 முறை வென்று முன்னிலை வகிக்கிறது.

திண்டுக்கல் தொகுதி: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வசம் உள்ள இத்தொகுதி, வரலாற்று ரீதியாக சிபிஎம் மற்றும் காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற இடமாகும். திமுக இங்கு ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 தேர்தல்களில் சிபிஎம் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. இங்கு பிள்ளைமார், நாயுடு மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

Palani
Palani web

நத்தம் தொகுதி: அதிமுகவின் விஸ்வநாதன் வசம் உள்ள நத்தம் தொகுதியில், கடந்த 5 தேர்தல்களில் 4-இல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. முத்தரையர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூகத்தினர் அதிகம் உள்ளனர். திமுக இங்கு ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது அதிமுகவின் பலத்தைக் காட்டுகிறது.

நிலக்கோட்டை தொகுதி: அதிமுகவின் தேன்மொழி எம்.எல்.ஏ- வாக உள்ள நிலக்கோட்டையில், கடந்த 5 தேர்தல்களில் அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பட்டியல் சமூகத்தினர் மற்றும் முக்குலத்தோர் வாக்குகள் இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ் இங்கு 7 முறை வென்றிருந்தாலும், சமீபகாலமாக அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது

வேடசந்தூர் தொகுதி: திமுகவின் எஸ்.காந்திராஜன் வசம் உள்ள வேடசந்தூர் தொகுதி, வரலாற்றுரீதியாக அதிமுகவின் பிடியில் இருந்து வந்துள்ளது. கவுண்டர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் பரவலாக உள்ள இத்தொகுதியில், கடந்த 5 தேர்தல்களில் அதிமுக 3 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒருமுறையும் வென்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுக தனது செல்வாக்கை வலுவாகத் தக்கவைத்துள்ள அதேவேளையில், அதிமுக தனது பாரம்பரியமான தொகுதிகளைக் காப்பாற்றி வருகிறது. வரப்போகும் தேர்தல்களில் சமூகக் காரணிகளும், கடந்தகால வரலாற்றுப் பலமுமே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com