திண்டுக்கல்: சாலையோரம் சடலமாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை – வீசிச் சென்றது யார்? என விசாரணை
செய்தியாளர்: அஜ்மீர் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலை பெருமாள் கோவில் என்ற இடத்தின் அருகே தோப்புபட்டி காலனி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் நடந்து சென்றுள்ளனர். அப்போது சாலையோரம் சடலமாக பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக ரெட்டியார்சத்திரம் போலீசருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

