தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு: ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பிக்கு 4 வருட சிறை!
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமனுக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் கும்பலால் எரிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்களான கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வன்முறையை தடுக்கத் தவறியதாக, ஏடிஎஸ்பி ராஜாராமன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சிபிஐ மற்றும் வன்முறையில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனு மீது கடந்த 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய் தது. அத்துடன் அட்டாக் பாண்டி உள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பவத்தின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை 3 மாதங்களில் வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமன் வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கள், அன்றைய தினம் அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
அதன்படி அவர் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகியிருந்தார். 4 வருட சிறை தண்டனை விதித்து உச்ச நீதி மன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.

