நெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் ! சிரமங்களை சந்திக்கும் மாணவிகள்

நெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் ! சிரமங்களை சந்திக்கும் மாணவிகள்
நெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் ! சிரமங்களை சந்திக்கும் மாணவிகள்

நெல்லை டவுணில் தற்போது நடைபெற்று வரும் பால பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் ஆபத்தான நிலையில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே மாணவிகள் பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லை டவுண் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கல்லணை மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4500 மேற்பட்ட  மாணவிகள் பயின்று வருகின்றனர், அதன் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றும், அங்கன் வாடி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. மாநகராட்சி பள்ளிக்கு சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் வந்து கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி முன்பு செல்லும் சாலையானது தென்காசி, குற்றாலம், பாபநாசம் செல்லும் முக்கிய சாலையான அமைந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் ஒருபுறம் இந்த சாலையில் அமைந்துள்ள கல்லணை வாய்க்கால் பாலம் முற்றிலும் சேதமடைந்ததை  தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் அதை புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங்கப்பட்டது. அதே போல மறுபுறம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் அந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. வாய்க்கால்  பால பணிக்காக 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஆனால் இன்று பள்ளிகள் தொடங்கியதால் நேற்று இரவோடு இரவாக மாணவிகள்  செல்வதற்காக ஒரு ஓரமாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது,  தரமில்லாத சாக்கடை கலந்த சகதி மண்ணை கொண்டு பாதை அமைக்கப்பட்டு உள்ளதால்  ஆபத்தான நிலையில் அந்த பாதையை மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்வதால் மாணவிகளின் பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். 

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர், “எதிர்பாரா விதமாக இந்த பாதையை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படலாம் என்றும் அச்சப்படுகின்றனர். தற்போது மழைகாலம் துவங்க உள்ளதால் சகதி மண்ணை கொண்டு அமைக்கப்பட்ட மண்பாதை முற்றிலும் துண்டிக்கப்படும் என்றும், கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோது பணிகளை தொடங்காமல் தற்போது பள்ளி தொடங்கியபோது பணிகள் தொடங்கியதால் மாணவிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்” எனக் கூறுகின்றனர்.

மேலும் சாலையின் ஓரம் குடிநீர் குழாய்கள் மற்றும் சேதமான பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் போன்றவை வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பிரதான சாலையில் நடந்து செல்வதே சிரமமான ஒன்றாக இருப்பதோடு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மாணவிகள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலையில் உரிய நேரத்திற்கு பள்ளி செல்ல கால விரையம்  ஏற்படுவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.  

மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளி செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரவும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்  என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த பணிகளை பார்வையிட்ட வட்டாட்சியரிடம் கேட்ட போது, இந்த மாத இறுதிக்குள் பாலம் கட்டி முடிக்கப்பட உள்ளது என்றம் மாணவிகள் பள்ளிக்கு செல்ல எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com